ரணிலுக்கு ஆதரவு வழங்க அதாஉல்லா தீர்மானம்..!
ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க அதாஉல்லா தீர்மானம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


தேசிய காங்கிரஸின் உயர் பீடம் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இன்று (16) திங்கட்கிழமை கொழும்பில் கூடிய போதே குறித்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

 

இது தொடர்பில் தேசிய காங்கிரஸின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகரான சட்டத்தரணி மர்சூம் மௌலானாவினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ள இவ்வேளையில் தேசிய காங்கிரஸ் இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக இன்று கூடியது.


சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் நியமனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியாகேபூர்வமான கடிதம் தொடர்பிலும் கட்சியின் உயர் பீடத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.


நாடு தற்போது எதிர்கொள்ளும் தேசிய பொருளாதார நெருக்கடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக தேசிய காங்கிரஸ் பார்ப்பதோடு மட்டுமன்றி, நமது நாட்டு மக்களுக்காக அவை அனைத்தும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.


எனவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கான உடனடித் தேவைகளை பூரத்தி செய்யும் பொருட்டு புதிய பிரதமரின் செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது.


மேலும் பாராளுமன்றத்தில் ஒன்றாகச்  செயற்படும்  சக பத்துக் கட்சிகளோடு இணைந்து தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு விடயதானத்தையும் தனித்தனியாகக் கருத்திற் கொண்டு  அரசாங்கத்தின் நடவடிக்கை களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் கட்சி உயர் பீடம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது" என்றார்.


(விடியல்)