மக்கள் ஆணை மீளப் பெறப்பட்டவரால் மக்கள் ஆணையற்றவர் நியமிப்பு : சுமந்திரன்(ஆர்.ராம்)


மக்கள் வழங்கிய ஆணை மீளப் பெறப்பட்டுள்ளவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் ஆணையற்றவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.


பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் சுமந்திரன் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய மக்கள் ஆணையை அவர் மீளப் பெற்றுக் கொண்டுள்ளனர். அவரை வீட்டுக்குச் செல்லுமாறு தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.


அதேநேரம், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.


அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அக்கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தவர் ஆவார்.


ஆகவே, மக்கள் ஆணை மீளப் பெறப்பட்ட ஒருவரால் மக்கள் ஆணையே இல்லாதவர் நியமிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.