இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் : கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்







கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்புகிறது.


இதன் முதல் கட்டமாக நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (18) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் அரசிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வருகிறன.


இதனிடையே இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதற்கு முன் வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 தொன் பால்மா பொருட்கள் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தார்.


இதற்காக தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.


இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து கப்பல் மூலமாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.


முன்னதாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள நிவாரணப் பொருட்களை சென்னையில் உள்ள இலங்கைத் துணை உயர் ஸ்தானிகர் திரு. வெங்கடேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.


இதில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் ஆவின் பால்மா பவுடர் மற்றும் 24 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு சரக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.


இதனைத் தொடர்ந்து மீண்டும் 22ஆம் திகதியன்று இரண்டாவது கட்டமாக இலங்கைக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.