அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் 13 பெண்கள்




வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் 13 பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21ஆம் திகதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்காட் மொரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.


அதைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.


இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.


தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் 30 பேருக்கு ஆளுநர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.


30 பேரைக் கொண்ட அமைச்சரவை யில் 13 பேர் பெண்கள் ஆவர். அவுஸ்திரேலியா வரலாற்றில் அமைச்சரவையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.


கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.