இலங்கையில் எரிபொருளை வழங்குமாறு கோரி கொந்தளித்த மக்கள் : வீதிகளை மறித்துப் போராட்டங்கள் முன்னெடுப்பு
(நா.தனுஜா)


நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம் பெற்ற எரிபொருள் பிரச்சினை பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இன்று 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பின் சில பாகங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்த மக்கள் வீதிகளை மறித்துப் போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்பவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.


'வாகனங்களுக்கு அவசியமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை காணப்படுவதைப்போன்று தற்போதைய சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஏதோவொரு வகையிலான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.


அவ்வாறிருக்கையில் எரிபொருளைக்கோரி வீதிகளை மறித்து, ஏனைய சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைப்பது எவ்வகையில் நியாயம்?' என்று கேள்வியெழுப்பிய பாதிக்கப்பட்டவர்கள் மக்கள், ஏற்கனவே பிரச்சினைகளுக்குள்ளாகியிருப்பவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.


காலையிலேயே ஆரம்பமான வீதிமறியல் போராட்டம்
தமது வாகனங்களுக்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் அதனால் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.


இந்நிலையில் 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னைய நாள் இரவு மற்றும் அதிகாலையிலிருந்து காத்திருந்த மக்கள் கோபமடைந்து காலை 8 - 9 மணியளவில் எரிபொருளை வழங்குமாறு வலியுறுத்தி வீதிகளை மறித்துப்போராட ஆரம்பித்தனர்.


கடுமையான போக்குவரத்து நெரிசலும் அமைதியின்மை நிலையும்
அதன்படி தெஹிவளை, பஞ்சிகாவத்தை, முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த வீதிகளில் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் காலையிலேயே போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததுடன், அவ்வழியில் செல்லும் பேரூந்து உள்ளிட்ட வாகனங்கள் வேறு வீதிகளுடாக அனுப்பப்பட்டன.


மேலும் மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருதானை - புஞ்சி பொரளை சந்தியிலிருந்து ஆனந்தா கல்லூரி வரையான வீதி மூடப்பட்டு, வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன.


இதன் காரணமாக இன்றைய தினம் கொழும்பு - காலி வீதி உள்ளடங்கலாக கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பதிவானதுடன், அமைதியின்மை நிலையொன்றும் தோற்றம்பெற்றது.


அத்தோடு வழமையாக பேரூந்து, முச்சக்கர வண்டி அல்லது தனியார் வாகனங்களில் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் இன்றைய தினம் புகையிரதத்தைப் பயன்படுத்தியமையினால் அங்கு சன நெரிசல் காணப்பட்டது.


அவசர பயணங்களை முன்னெடுக்க இயலாமல் திண்டாடிய மக்கள்
திடீரென காலை வேளையில் பல பாகங்களிலும் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த வீதிமறியல் போராட்டத்தினால் மேலும் பல பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.


இந்தப் போராட்டங்கள் நண்பகல் வரையில் நீடித்ததன் காரணமாகக் குறிப்பாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதிலும், மீண்டும் வீடு திரும்புவதிலும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்ததுடன் தமது பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடையும் நிலையேற்பட்டது.


அதேவேளை தனியார் மற்றும் அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்லமுடியாமல் திணறினர்.


வீதிகள் மறிக்கப்பட்டதன் காரணமாக சொந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியாமலும், எரிபொருள் இன்மையால் முச்சக்கர வண்டிகளில் செல்ல முடியாமலும், பேரூந்துகள் வழமையாகச் செல்லும் வழி மாற்றப்பட்டமையால் குழப்பமடைந்தும் அவர்கள் அல்லலுற்றனர்.


மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்வற்கும், மரணச்சடங்கு, திருமண வைபவங்கள் போன்றவற்றுக்கும் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போராட்டம்
அதேவேளை மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள கிழக்குப் பிராந்தியப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்குக் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


பொலிஸார் அளித்த உத்தரவாதம்
இந்நிலையில் கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வகையிலேனும் எரிபொருளைப் பெற்றுத்தருவதாக பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, போராட்டக் காரரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


எரிபொருள் நிரப்புநிலையங்களில் 2 - 3 கிலோ மீற்றர்களுக்கு வரிசை
இருப்பினும் வழமைபோன்று இன்றைய தினத்திலும் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 - 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.