மகனின் சடலத்தைப் பெற மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த வயதான தம்பதியினர்

.
பிகார் மாநிலத்தில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தங்களது மகனின் சடலத்தைப் பெற, மருத்துவமனை ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க, வயதான தம்பதி பிச்சை எடுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்தியாவில் வட மாநிலங்களில் ஒன்றான பிகாரில், வயதான தம்பதியினர் பிச்சை எடுக்கும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியது.


பிகாரின் சமஸ்திபுர் மாநகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனையில் உள்ள தங்களது மகனின் சடலத்தைப் பெறுவதற்காக, இறந்தவரின் பெற்றோர், வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதாக உள்ளது.


அங்குள்ள மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கும் மகனது சடலத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர் நிர்பந்தம் செய்ததால், இது போல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக, அந்த தம்பதி காணொளியில் தெரிவித்துள்ளனர்.


லஞ்ச குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அந்த ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த தம்பதியின் நிலை என்பது ஏழ்மை நிலையில் உள்ள பல்லாயிரம் இந்திய குடும்பத்தினரின் பிரதிபலிப்பாக உள்ளது.


மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள், தங்களுடைய வழக்கமான பணியை செய்வதற்கு, லஞ்சம் கேட்பது மற்றும் அவர்களின் துன்புறுத்தல்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.


காணாமல் போனவர் பிணமானார்
பாதிக்கப்பட்ட மகேஷ் தாக்கூரும் அவரது மனைவியும் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்னர் எனது மகன் காணாமல் போனார். இந்த வார தொடக்கத்தில், 'உங்களது மகன் இறந்து விட்டார்' என்று தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.


இறப்புக்கான காரணம் எதையும் சொல்லவில்லை. உடல் சதார் மாநகர மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறினார்கள்'' என்றனர்


லஞ்சம் கேட்ட ஊழியர்
இதையடுத்து, மகனின் உடலைப் பார்க்க சென்ற போது, அடுத்த அதிர்ச்சியாக, ''50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தன் உடலைத் தருவோம்'' என்று மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார்.


உதவிக்கு வேறு வழியில்லாத நிலையில், லஞ்சம் கேட்ட தொகையைத் தர, பிச்சை எடுத்ததாக, மகேஷ் தாக்கூர் சொல்கிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், "ஏழைகளாகிய எங்களால், இந்த தொகையை எப்படி கொடுக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்புகிறார்.


ஆனாலும், அவர் தனது மகனின் இறுதிச் சடங்கை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.


இதனிடையே, இறந்த மகனின் உடலைப் பெற, மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால், பெற்றோர் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


சுகாதாரத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் ?
இது குறித்து, மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.கே.சௌத்ரி கூறுகையில், 'இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார்.


என்டிடிவி செய்தி தொலைக்காட்சியில் அவர் ''இது மனித குலத்திற்கு அவமானகரமானது. இதற்கு காரணமானவர்கள் தப்ப முடியாது'' என்று உறுதியளித்துள்ளார்.


இது குறித்து பிகார் மாநில சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த 'விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே தெரித்துள்ளார்.