நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு வாக்களித்தவர்கள் 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர்...!!!!!

 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வெற்றி பெற ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முட்டாள்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயத்தில் நாங்கள் கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்குவது, எரிந்து போன வீட்டுக்கு பதிலாக வீடு, அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது, கார்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம், இரண்டு ஆண்டு காப்பீடு போன்றவற்றை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினர்.


பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய 15 பேரை கொண்ட நாடாளுமன்ற குழுவினரும் எங்களிடம் பணத்தை கோரினர்.


டளஸ் அழகப்பெருமவை நாங்கள் ஆதரிக்கின்றோம், எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்டனர். இது பற்றி நான் சஜித்திடம் பேசினேன், ஐந்து சதம் கூட வழங்கக் கூடாது என அவர் சொன்னார்.


அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு இவர்கள் வாக்களிக்க 10 முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது.


சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இன்னும் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறி வருகிறார். அவர் மிக நேர்மையானவர் என்பதுடன் அப்பாவி எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.