அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தோல்வி... பாராளுமன்ரின் ஊடாக பதில் ஜனாதிபதியை நியமிப்பதற்கு சாத்தியம்.


அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.


நாடாளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என பொதுஜன பெரமுனவின் ஒருசிலர் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.


வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளமைக்கு தவறான பொருளாதார முகாமைத்துவம் பிரதான காரணியாக உள்ளது.


பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து பொருளாதாரத்தை வழிநடத்தியவர்கள் பொறுப்பில் இருந்து விலகினார்கள் அவ்வாறாயின் தவறான முகாமைத்துவமே அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம்.


செல்வந்த தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் வழங்கப்பட்ட வரிச்சலுகை அரச வருவாய் இழப்பினை தீவிரப்படுத்தியது.



பொருளாதார நெருக்கடி மிக மோசமான முறையில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.நாட்டு மக்கள் அனைவரும் வர்க்க அடிப்படையிலில்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என குறிப்பிடப்படுகிறது.


அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தோல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.


நாடாளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை நியமிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு குறிப்பிடுகிறார்.


சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் அல்லது பொதுத்தேர்தலை நடத்தி மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.