உலக நாடுகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். 


ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார். 


அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையின் சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். 


ஜனாதிபதி செயலகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இதன்போது தெரிவித்துள்ளார். 


அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க கேபிடல் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் அமெரிக்க சட்டத்தின்படி இவ்வாறுதான் செயற்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். 


ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் பல முக்கிய ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


அத்துடன், 14, 16 மற்றும் 21 ஆம் திகதிகளில் போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறுமாறு முன்னறிவிப்பு வழங்கப்பட்ட போதிலும், அதிகாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த வளாகத்தை விட்டு வெளியேற மறுத்த நிலையில் பிற்பகல் 2 மணி வரை கால அவகாசம் கேட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


எனினும் அவ்வாறு தொடர்ச்சியாக கால அவகாசம் வழங்க முடியாத சூழலில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்தி எதிர்ப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.