நீதிமன்றத்தால் பிரதிவாதியாக்கப்பட்ட கோட்டாபய!

 

நாட்டையும் மக்களையும் திவால் நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்தல் அனுப்ப இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இந்த மனுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த வழக்கில் பிரதிவாதிகளான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீடிக்க உத்தரவிட்டது.


அத்துடன் இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.