இலங்கைக்கு நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்களை இடை நிறுத்தியது ஜப்பான்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) கீழ் ஜப்பானால் நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய விஸ்தரிப்புக்காக ஜப்பானிய தாய்சேய் நிறுவனத்துக்கான நிதியை ஜெய்க்கா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


எனினும் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜெய்க்கா நிறுவனம், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஜப்பானின் 12 திட்டங்களுக்கான நிதியை இரத்துச்செய்துள்ளதாக குறிப்பிட்டார்.


எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வரும் வரையிலேயே இந்த நிதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜெய்க்கா நிதியம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


நிதி மற்றும் கடன் நிறுத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.