இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து 20 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.


முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை சுமார் 18 ரூபாவாக உள்ளதாகவும், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமெனவும் அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.


தற்போது ஒரு முட்டையின் விலை 58, 60, 65 ரூபாவாக காணப்படுவதாகவும், முட்டை உற்பத்தியாளர்கள் அவர்கள் நினைத்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஏழெட்டு முட்டை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு முட்டை விலையை அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர், முட்டை உற்பத்தியாளர்கள் மக்களைச் சுரண்டுவதற்கு இடமளித்து அரசாங்கம் மௌனமாக காத்துக்கொண்டிருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.