அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் சிறுவர்கள் – யுனிசெப்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.


நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரேயா அட்ஜெய், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்நிலை தொடருமானால் குழந்தைகள் விடயத்தில் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.


அத்தோடு நாட்டில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.


தற்போதைய நெருக்கடி நிலையில் பாடசாலைகள் உரிய முறையில் இயங்காதமை காரணமாக நெருக்கடிக்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்ட மதிய உணவை கூட இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த நாட்டில் உள்ள குழந்தைகள் அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.