ரணில் கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் - ஐநா விசேட அறிக்கையாளர்


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.


"மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.


அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.