மத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாடு குறித்தும் அவதானம் செலுத்துகிறோம்... அதன் மூலம் மியான்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலிருந்து பெருமளவிலான மக்களை இந்நாட்டிற்கு அழைத்து வர முடியும் ; ஜனாதிபதி

 




(எம்.மனோசித்ரா)


பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை எந்தத் தாமதமும் இன்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரருடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு ஆசி பெற்றதோடு, வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரரை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


அங்கு, மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,


பொருளாதாரத்தை மீட்பதற்கு முக்கிய காரணியாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.


தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களுக்கு உரம் வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.


மேலும், சோளப் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தினால், கோழிப்பண்ணை கைத்தொழிலை தொடர முடியும். சோளத்திற்கான விதை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.


தமது பிரதேசங்களில் விவசாயத்திற்கு தேவையான உரம் , எரிபொருள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறியும் பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதோடு, மத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாடு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுவருகிறது.


அதன் பிரகாரம், மகா விகாரையின் அகழ்வுப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.


அதன் மூலம் மியான்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலிருந்து பெருமளவிலான மக்களை இந்நாட்டிற்கு எம்மால் அழைத்து வர முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.