ஜனாதிபதி ரணில் தலைமையில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பார்.


அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு விடுக்கப்பட்டிருந்தது.

 

அத்துடன்  புதிய கூட்டத்தொடர் 2022,ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன் பிரகாரம் இன்று காலை 10.30மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க இருக்கின்றார்.


அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  மிகவும் வைபவரீதியாக இடம்பெறுகின்ற போதும், ஜனாதிபதியின் ஆலாேசனைக்கமைய  நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சாதாரண நிகழ்வாக மேற்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.


பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் முகமாக  காலை 9,55மணியளவில் ஜனாதிபதி பாராளுமன்ற பிரதான வாயிலை வந்தடைவார்.


அவரை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்பார்கள். பின்னர் ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றிவைப்பார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம்  ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச்சென்று, ஜனாதிபதியின் தனிப்பட்ட கொலுவறைக்கு அழைத்துச்செல்வார்கள்.

 

அதனைத்தொடர்ந்து சபை நடவடிக்கை ஆரம்பிக்கும் முகமாக காலை 10.25மணிக்கு கோரம் மணி 5நிமிடத்துக்கு ஒலிக்கவிடப்படும். இதன்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சபைக்குள் வரவேண்டும்.


பாராளுமன்ற சபை மண்டபத்துக்கு பவனியாக அழைத்துவரப்படும் ஜனாதிபதி, காலை 10.30மணிக்கு சபைக்குள் பிரவேசிப்பார்.


ஜனாதிபதி சபைக்குள் நுழைய ஆரம்பித்தவுடன் அவரது வருகையை சபைக்கு அறிவிக்கப்படும். இதன்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்கவேண்டும். ஜனாதிபதி அக்கிராசனத்துக்கு சென்று உறுப்பினர்களை அமரும்படி கேட்டுக்கொள்ளும்வரை சகல உறுப்பினர்களும் எழுந்து நிற்கவேண்டும்.

 

அதனைத்தொடர்ந்து  ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்குவார். இதன்போது  செயலாளர் நாயகம் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமை மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுதல் பற்றிய பிரகடனத்தை சபைக்கு வாசிப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்துவார்.


ஜனாதிபதியின் உரை முடிவடைந்தவுடன் சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிவரை ஒத்திவைப்பார். அதனையடுத்து சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் ஜனாதிபதி சபா மண்டபத்தில் இருந்து  வெளிக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்