பிரபல ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களுடைய மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

 


இலங்கையின் ஊடக வரலாற்றில் தடம்பதித்த, ஒரு முதிர்ச்சி மிக்க ஊடகவியலாளரான பிக்கீர் அவர்களின் மறைவு வேதனை தருகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறியுள்ளதாவது,


"கிழக்கு மாகாணத்தின் பிரபல ஊடகவியலாளரும், கல்விச் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்த ஆசிரியருமான சகோதரர் பிக்கிர் அவர்களுடைய மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.


தன்னலமும் சுயநலமும் கொண்ட இந்தக் காலத்தில், இவற்றையெல்லாம் கடந்து தமது பிரதேசத்தினதும் சமூகத்தினதும் மேம்பாட்டுக்காகவும், உண்மையான தகவல்களை உரிய முறையில் மக்கள் மத்தியில் கொண்டுசென்று, அதன் ஊடாக சமூகத்துக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற வகையில், தமது கால நேரங்களை செலவழித்த ஒரு சிறந்த ஒரு ஊடகவியலாளர் சகோதரர் பிக்கீர்.


தமது பிரதேசத்தில் உள்ள கல்வியாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, என்னையும் அந்த நிகழ்வுக்கு அழைத்து, அவரது தலைமையில் கல்வியாளர்களை கௌரவித்த ஒரு நல்லெண்ணம் கொண்டவராக அவரை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.


அன்னாரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், மர்ஹூம் பிக்கிர் அவர்களின் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்மிகு சுவன வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.