ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், மற்றும் கொரோனா காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது... கோட்டபய ராஜபக்ஷ இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டை வந்தடைவார்.


இராஜதுரை ஹஷான்)


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டை வந்தடைவார்.




முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வரபிரசாதங்கள் கோட்டபய ராஜபக்ஷவிற்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.




பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் கொவிட் பெருந்தொற்று தாக்கம் ஆகிய காரணிகளினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல செயற்திட்டங்களை செயற்படுத்தியது.




பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தி,அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்கள்.


பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக கட்சி என்ற ரீதியில் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம்.சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.


அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தோம்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கும்,அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும பாதுகாப்பு மற்றும் வரபிரசாதங்கள் கோட்டபய ராஜபக்ஷவிற்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்.இன்னும் ஓரிரு நாட்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை வந்தடைவார்.


ஜனநாயக போராட்டத்தை அரசாங்கம் முடக்குவதாக ஒருசிலர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன.


பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை.


தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அரசுக்கு எதிரான சூழ்ச்சி செயற்படுத்தப்படும் நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதில்லை.




சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்படுத்தப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு சில தீர்மானங்களை செயற்படுத்தியுள்ளது என்றார்.