வடக்கு- கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு ஹக்கீமுக்கு இல்லை : புத்திஜீவிகள், சமூக தலைவர்கள் ஹக்கீமுக்கு சமூகம் தொடர்பில் விளக்க முன்வரவேண்டும்- கிழக்கின் கேடயம்.

 


நூருல் ஹுதா உமர் 


வடக்கு- கிழக்கின் பூர்விகம், நிலபுல எல்லைகள், கலாச்சாரம், இன நல்லிணக்கம் பற்றி எதுவும் தெரியாது கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் சண்டைக்கு மூட்டிவிடும் விதமாக  கருத்துக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு வட- கிழக்கு மக்களின் அபிலாசைகளை முழுமையாக தெளிவுபடுத்த வடக்கு கிழக்கிலுள்ள சமூக தலைவர்கள், புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என கிழக்கின் கேடயம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  


கிழக்கின் கேடயம் அமைப்பின் பிராதன ஒருங்கிணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், ஒருகதையை திரும்ப திரும்ப சத்தம்போட்டு கூறினால் உண்மையாகிவிடும் என்பதை அறிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் வடக்கு கிழக்கு தொடர்பில் தான் கொண்டுள்ள பிழையான எண்ணங்களை சமூகத்தின் அபிலாசைகளாக தொடர்ந்தும் பொதுவெளியில் முன்வைத்து வருகிறார். ஒரு சமூகத்தின் அதிக ஆதாரவாளர்களை கொண்ட தேசிய கட்சியொன்றின் தலைவராக இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமூக பொறுப்புக்களை கடந்து சமூகத்தை பலிகொடுக்கும் வேலைத்திட்டங்களிலும், கருத்தாடல்களிலும் முழுமையாக இறங்கியுள்ளார். 


தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முஸ்லிங்கள் குறுக்காக நிற்கமாட்டார்கள் எனும் அவரது வாதத்தின் மூலம் தமிழ்- முஸ்லிம் மக்கள் ஏற்கனவே கொண்டுள்ள உறவை சிதைத்து இனவாத அரசியலொன்றை செய்ய எத்தனிப்பதும், வடகிழக்கு இணைப்பை மறைமுகமாக கோருவதும் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. இப்படிப்பட்ட சிந்தனைகளிலிருந்து ரவூப் ஹக்கீம் அவர்களை வெளியே கொண்டுவர  சமூக தலைவர்கள், புத்திஜீவிகள் உடனடியாக முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.