நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு பின்னர் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும்


எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் நிலக்கரி பற்றாக்குறையை எதிர்நோக்கும் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறையால் ஆலை தானாக மூடப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


இம்மின் நிலையமானது தேசிய மின் கட்டத்திற்கு கிட்டத்தட்ட 900 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது. இதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டால், நாளாந்தம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக, தென்மேற்கு பருவமழை ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை செயலில் இருக்கும், எனவே கடல் சீற்றம் காரணமாக இந்த காலகட்டத்தில் நிலக்கரி இறக்கும் சாத்தியம் இல்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதியை மேற்கொள்ள முடியாததன் காரணமாக மின் உற்பத்தி நிலையம் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.