"2023 மார்ச் 20க்கு முன் தேர்தலை நடத்த முடியும்" - தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!


உள்ளூராட்சி தேர்தலை 2023 ஆம் வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பதாக நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா தெரிவித்தார்.


உள்ளூராட்சி சபை சட்டத்தின் பிரகாரம் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னரே ஆணைக்குழுவுக்கு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தற்போது மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர்  வசம் உள்ளதால் அந்த அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பெற்றுத் தருமாறு நாம் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.


அமைச்சர்களிடம் அதற்கான அதிகாரம் உள்ளதுடன் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.


எவ்வாறெனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒருவருடத்துக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.


அதன்படி மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதற்கான அதிகாரமும் ஆணைக்குழுவுக்குள்ளது.

அதேவேளை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இம்முறை வாக்காளர் இடாப்பில் கையொப்பமிடுவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


கையெழுத்திட்ட பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்