தேர்தல் பிரச்சார செலவைக் கட்டுப்படுத்த சட்டம்!




தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக செலவிடும் அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்துவதே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் சட்ட வரைவுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் இந்த சட்டமூலத்தை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்டதேர்தல் சட்டங்கள் குறித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவும் பரிந்துரைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இச்சட்டம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும், தபால் மூலம் வாக்களிக்க தகுதியில்லாத, ஆனால் தேர்தல் நாளில் கடமையாற்றுபவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தவும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்க விதிகளை சட்டப்பூர்வமாக்குதல், தேர்தல் முறைப்பாடுகளை துரிதமாக தீர்ப்பதற்கு தேர்தல் நீதிமன்றத்தை நிறுவுதல் உள்ளிட்ட 07 விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.