டின் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தக் கோரிக்கை


-சி.எல்.சிசில்-


இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு, உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்குமாறு தமது கோரிக்கைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.


இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைப்பதால் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.


இதனால் மீனவ மக்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவதால் டின் மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.


இலங்கை போன்ற நாடு ஒரேயடியாக இறக்குமதியை முற்றாக நிறுத்துவது இலகுவானது அல்ல எனவும், அரிசியில் இலங்கை தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தாலும் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.