அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் மறைவு இஸ்லாமிய சிந்தனைப்பெருவெளியில் பாரிய வெற்றிடம்!

 

அறிஞர் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி (Yusuf al-Qaradawi ) அவர்களின் இழப்பு, இஸ்லாமிய சமூகத்தின் பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 


அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


"அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் எகிப்தில் பிறந்த மிகப்பெரும் சிந்தனைவாதி. ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் மார்க்க கல்வியைத் தொடர்ந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, இஸ்லாமிய கல்வியில் உச்சத்தை தொட்டவர். சமுதாயத்துக்கு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வந்தவர். 


அவரது கருத்துக்கள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. எனினும், அவரது கருத்துக்கு மாற்றமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அவற்றை ஏற்றுக்கொண்டு, தனது தவறை திருத்திக்கொள்ளும் மனப்பாங்கு உடையவராகவே அவர் இருந்திருக்கின்றார். எனவேதான், இஸ்லாமிய அறிஞர்களிடமும் இஸ்லாமிய மக்களிடமும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். 


10 வயதிலேயே அல் குர்ஆனை மனனம் செய்த அவர், எகிப்து அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை தொடர்ந்தவர். அவரது இழப்பு இஸ்லாமிய சமுதாயத்துக்கு பாரிய இழப்பு என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. 


எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது நற்கருமங்களையும், சமூகப் பணிகளையும் பொருந்திக்கொள்ளட்டும்" என்றார்.