நீதிமன்றம் சென்ற சரத் பொன்சேக்கா




கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவை வெளியிட ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி, இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதால் அதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் செல்லுப்படியற்றது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த மனுவை விசாரித்து தீர்ப்பை வழங்கும் அவரை வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இடைக்கால தடையை விதிக்குமாறும் மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.