'சிறுவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு முறையாக நெறிப்படுத்துவோம்' - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

 

எதிர்கால உலகை தூக்கி நிறுத்தும் தூண்களாகவும், வாழ்க்கையின்  விடிவெள்ளிகளாகவும் உள்ள நமது சிறார்களின் தினம் சிறக்க வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியதீன் தெரிவித்துள்ளார்.


சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


"நம்மை வாழவைப்பதும், திருப்திப்படுத்துவதும் சிறுவர்களின் சந்தோஷமே. அவர்களின் இலட்சியங்களை ஈடேற்றவே நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.


எனவே, நிம்மதியான உலகுக்குள் அவர்களை நுழையவைப்பதற்கான அடித்தளங்களை நாமிட வேண்டும். 


சிறுவர்களின் சிந்தனைகள் இன்று பாரிய அழுத்தங்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. அவரவர் ஆளுமைகளை அடையாளங்கண்டு சிறுவர்களை நெறிப்படுத்துவதே சிறந்தது. 


ஆனாலும், சிறகடித்துப் பறக்கும் அவர்களது உள்ளங்களை நேரிய பாதையில் மாத்திரம் நிலைப்படுத்த உழைப்பதே சிறந்தது. எல்லையில்லா வானம் போல் சிறுவர்களின் வாழ்க்கையும் சிறந்த நெறிகளோடு விரியட்டும்" என்று தெரிவித்துள்ளார்.