பொது மக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

 


90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


எரிசக்தி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக அபேகுணவர்தனவினால் இன்று (15) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 


90 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் நியாயமற்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


இதேவேளை, மின் கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவற்றால் இந்த மேன்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 


உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்களை அமைச்சரவை குறைத்துள்ளதாக மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.