பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன, ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அண்மையில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த நிலையில் நீல் ஹப்புஹின்ன மீது பல தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.


பின்னர் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.


அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே, தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் அவர் கூறியிருந்தார்.


எவ்வாறாயினும் இந்த தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படவில்லை என அண்மையில் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.


எனினும் தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் பெறப்படட தகவல்களுக்கு அமைய, அமைச்சரவையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை பின்னர் தெரியவந்தது.