இந்திய முட்டைகளின் முதற் தொகுதி இலங்கை வந்தடைந்தது



நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதலாவது தொகுதி இன்று (23) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் TAD ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


ஆரம்பத்தில் பெப்ரவரி பிற்பகுதியில் வரவிருந்த இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள், ஏற்றுமதி தொடர்பில் அதன் சான்றிதழ் விடயங்களால் பல முறை தாமதமாகின.


சுகாதார அமைச்சினால் நடத்தப்படவுள்ள உரிய பரிசோதனைகளைத் தொடர்ந்து முட்டைகள் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்தவும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கவும் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருந்தது.


இந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பொது உபயோகத்திற்காக கடைகளில் விற்கப்படாது என்பதோடு, இம்முட்டைகள் பேக்கரி கைத்தொழில் உள்ளிட்ட உணவு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


உணவு உற்பத்தியாளர்களுக்கு ரூ. 40 அல்லது அதற்கும் குறைவாக விற்பனையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி கைத்தொழிலில் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை விரைவாக தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.


இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி கைத்தொழிலில் கையாளும் போது கையுறைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதோடு, முட்டை ஓடுகளை பாதுகாப்பாக நீக்க வேண்டுமெனவும், அகற்றப்படும் முட்டை ஓடுகளை எந்தவொரு சூழ்நிலையிலும் சுற்றுச்சூழலில் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி வருகையை முன்னிட்டு, அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பொருட்கள் வரி பெப்ரவரி 21 முதல் 3 மாதங்களுக்கு ரூ. 50 இலிருந்து ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.