“எரிபொருள் விற்பனை சந்தையை திறப்பது பாராட்டுக்குரியதே” – மரிக்கார்!


உள்ளூர் எரிபொருள் விற்பனைச் சந்தையைத் திறப்பது வரவேற்கத்தக்கதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

“எரிபொருள் விற்பனை சந்தையை திறப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் நுகர்வோரே இதில் பயனடைவார்கள். சந்தையில் பல தரப்பினர் இருக்கும்போது போட்டித்தன்மை அதிகரிக்கும், இதனால், அடிக்கடி விலை குறைப்புகளுக்கு வழி வகுக்கும்” என்றும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

“கல்வி மற்றும் சுகாதார சந்தைகளையும் திறப்பது நல்லது. மாலைதீவு போன்ற நாடுகளிலுள்ள மக்களை மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு வரவழைக்கும் வகையில், தனியார் துறையினர் அதிகமான மருத்துவமனைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்.

“எரிபொருள் சந்தையை திறப்பதை வரவேற்பதால், தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் சாதகமாக இருப்பதாக யாரும் நினைக்கக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் வரவேற்கிறோம்,”

மேலும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. சிங்கப்பூர் மாதிரியை ஒருவர் பின்பற்றலாம், அங்கு அரசதுறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு நிறுவனத்தை அரச நிறுவனமாக நடத்த முடியும், அதே நேரத்தில் நிறுவனங்களை நிர்வகிக்கும் பணியை தனியாருக்கு வழங்க முடியும்,”

சர்வதேச நாணய நிதியம் மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை எதிர்க்கும் பொதுஜன பெரமுனவின் சித்தாந்தங்களை மாற்றியமைக்காக தற்போதைய ஜனாதிபதியை பாராட்டுவதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.