இலங்கை தேசம் கண்ட மிகப்பெரும் கொடை வள்ளல் அப்துல் கபூர் ஹாஜியார் (கபூரியா அரபுக் கல்லூரியை ஆரம்பித்தவர்)


படத்திலுள்ளவர் இலங்கை தேசம் கண்ட மிகப்பெரும் கொடை வள்ளலான NDH அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள்.

இலங்கையின் புகழ்பெற்ற இரத்தினக்கல் வியாபாரி. மாபெரும் பரோபகாரி.

1931ல் கபூரிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பித்தவர்.

அதற்காக மஹரகமயில் சுமார் 17 ஏக்கர் பிரமாண்ட காணியை வக்பு செய்த பெருந்தகை.

மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உலமாக்களை வரவழைத்த முன்னோடி.

அத்துடன் நின்றுவிடாது கல்லூரியின் எதிர்கால நலனுக்காகவும் வருமானத்திற்காகவும் கொழும்பு கிரேன்ட்பாஸ் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த 2 1/2 ஏக்கர் காணியையும் எழுதி வைத்து இந்த சமூகத்திற்காக மிகப்பெரும் சேவையை செய்து இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்.

ஆனால் இன்று அவரால் வக்பு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட 92 வருடங்கள் பழமையான கபூரிய்யா அரபுக் கல்லூரி வக்பு சொத்தல்ல, அது தனியார் ட்ரஸ்ட் எனக் கூறி கபூர் ஹாஜியாரின் மகத்தான சேவையையும், அவரது கனவையும் சீர்குலைக்க முனைகின்றனர் சிலர்.

அவர்கள் வேறு யாருமல்ல கபூர் ஹாஜியாரின் நான்காவது பரம்பரையில் தோன்றியுள்ள அவரது ஓரிரு பேரப்பிள்ளைகள் என்பதுதான் பெரும் ஆச்சரியம்.

அவரது வாரிசுகளாலேயே அவரது சேவை துவம்சம் செய்யப்படுவது மிகப்பெரும் கவலைக்குரிய விடயம் மட்டுமல்லாது கண்டிக்கத்தக்க இழி செயலும் கூட.

கபூரிய்யா காணியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விடயங்களையும் கொஞ்சமும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளாது முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று சுலைமான் வைத்தியசாலை இருந்த இடமே இல்லை. அது அமைந்திருந்த கபூரிய்யாவுக்குச் சொந்தமான சுமார் 2 1/2 ஏக்கர் காணி 116 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு பெரும் அராஜகம்!

இவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டாமா?

பல கல்விமான்களை உருவாக்கி, பலருக்கு முகவரி கொடுத்த அரபுக் கலாசாலையின் நாமத்தை அழிக்க நினைக்கும் இவர்களது செயலை நாம் கண்டிக்க வேண்டாமா?

இந்த நாட்டில் எத்தனையோ வக்பு சொத்துக்கள் தனியார் உடமையாக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. வேறு சில வக்பு சொத்துக்களை வக்பு செய்தோரின் வாரிசுகளே கபளீகரம் செய்து அனுபவிக்கின்றனர். இந்த நிலைமை கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கும் ஏற்பட நாம் அனுமதிக்கலாமா?

கபூரிய்யா… முஸ்லிம் சமூகத்தின் சொத்து. அதனைப் பாதுகாப்பது நமது கடமை. அதன் விடயத்தில் நாம் மௌனிகளாக இருந்து கைவிடுவோமென்றால் ஏனைய வக்பு சொத்துக்களையும் அபகரிக்கும் திட்டங்கள் அரங்கேறுவதைத் தடுக்க முடியாது போகலாம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக.

புனித ரமளானில் உங்கள் பெறுமதியான துஆக்களில் எமது கல்லூரியையும் மறக்காமல் இணைத்துக் கொள்ளுங்கள்.

– பாஹிர் சுபைர் –