உள்ளூராட்சி மன்றங்களை ஆராய குழு நியமனம்அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் தலைமையிலான குறித்த குழுவில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக, மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து பணிகளையும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.


இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 03 ஆம் திகதி ஆளுநர்கள் மற்றும் பிரதேச செயலக தலைவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.


அத்துடன், மக்களுக்கான சேவைகள் குறித்து சுற்றுநிரூபமொன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


இதேவேளை, தற்போது ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போதிலும் மக்களுக்கான சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதையே ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.