மக்கள் பலம் அனைத்தையும் விட வலுவானது - சஜித் பிரேமதாச(எம்.மனோசித்ரா)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கத்தினால் எவ்வகையான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், மக்கள் பலம் அவை அனைத்தையும் விட வலுப்பெற்றதாகும். எனவே, இம்முறை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஜனாதிபதியினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ முன்னெடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், நிலைமை மிகவும் கடினமானது என்றும், சற்று பொறுத்திருக்குமாறும் தினந்தோறும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.


220 இலட்சம் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள துன்பத்தை ஆட்சியாளர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


ஊழல், மோசடிகளால் நாட்டை சீரழித்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.


தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் இலக்கு ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதாகும். நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு முன்னுரிமையளித்து மக்கள் கைகளில் கடும் பொருளாதார கொள்கையை திணிக்கும் இந்த அரசாங்கம் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.


இதன் முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெறும்.


மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என்று அரசாங்கம் எண்ணிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், அவற்றை விட மக்கள் பலம் வலுவானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.