ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசலில் உள்ள பீரங்கி ‘Canon’!


கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும். அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி இங்கு பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அவர் மறைந்ததும் அந்த வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கஸ்தலத்தில் பதிக்கப்பட்டிருந்த மீஸான் பலகை அல்லது மீஸான் கல் கொழும்பு நூதனசாலையில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட இந்தப் பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம்களின் பிரதான அடையாளமாகும்.

பள்ளிவாசலின் நுழைவாயிலில் Canon எனப்படும் பீரங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 500 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ரமழான் மாதத்தில் ஸஹர் முடிவடையும் நேரத்தில் பீரங்கியில் இருந்து ஒரு வெடி வைப்பார்கள்.. பின்னர் நோன்பு திறக்கும் (இப்தார் ) நேரத்திலும் இதனை வெடிக்க வைப்பார்கள். (பீரங்கிக் குழாயினுள் வெடி மருந்தை நிரப்பி வெடிகுண்டுக்கு பதிலாக பழைய பத்திரிகைத் தாள்களை உருளையாக அழுத்தி பின்னர் திரி மூலம் தீயிட்டு வெடிக்க வைப்பர்). இதன் மூலம் கொழும்பு நகர மக்கள் உரிய நேரங்களை அறிந்துகொள்வர். மருதானை ஸாஹிராக் கல்லூரி வரை இதன் சத்தத்தை கேட்க முடிந்தது.

இலங்கை வானொலியில் (Radio Ceylon) 1947 ஜூன் மாதம் 5ம் திகதி முதல் தடவையாக மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் அஸான் ஒலிபரப்பப்படும் வரையும் (மர்ஹூம் ராமிஸ் ஆலிம் இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்கள்) Canon எனப்படும் பீரங்கி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பஸ்ஹான் நவாஸ் SLBC