ஏப்ரல் 10 க்கு முன் நிதி கிடைத்தால் தபால் மூல வாக்கெடுப்பை நடத்தலாம் - தேர்தல் ஆணைக்குழு


(இராஜதுரை ஹஷான்)


தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால் 25 ஆம் திகதிக்குள் தபால்மூல வாக்கெடுப்பை நடத்த முடியும். இருப்பினும் நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி சாதகமான தீர்மானத்தை இதுவரை அறிவிக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் விவகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் தொடர்பில் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுன் பேச்சுவார்த்தையில் ஈடுபட கோரியிருந்தோம்.


பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம்.


உள்ளூராட்சிட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்க தீர்மானித்து அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம். இதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள அரச அச்சகத் திணைக்களத்துடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.


தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்குமாறு நிதியமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.


எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட நிதி தொகை கிடைக்கப் பெற்றால் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த முடியும்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுக்காத நிலையில் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. இவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.