வாகனத் தொடரணியில் புரண்ட கெப் : 2 மாணவர்கள் பலி, மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பதுளையில் கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


பதுளை, வின்சன் டயஸ் மைதானத்தில் நடைபெறும் பாடசாலை கிரிக்கட் போட்டியுடன் (Big Match) இணைந்தவாறு பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன அணிவகுப்பின் முடிவில், அதில் மாணவர்களுடன் பயணித்த கெப் வாகனமொன்று பதுளை நகரில் அமைந்துள்ள மாநகர சபைக்கு சொந்தமான வெற்று காணியில் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில், வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த போது குறித்த காணியின் நடுவில் உள்ள கொங்கிரீட் தூணில் கெப் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்தில் கெப் வண்டியில் பயணித்த 8 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.