ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் நீதி அமைச்சர்ஊழலுக்கு எதிரான ஊழல் ஒழிப்பு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


நீதி அமைச்சர் எனும் வகையில் விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்றையதினம் (27) சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்றம் வியாழக்கிழமை (27) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.


அதன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு வாசித்தளித்தார்.


அதில் ஊழலுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபை சமவாயத்தின் குறித்த சில ஏற்பாடுகளுக்கும் மற்றும் வேறு சர்வதேச ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச்சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்கும் பயன்கொடுப்பதற்கும் இலஞ்சம் ஊழல் பற்றிய சார்த்துதல்களை மற்றும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளை மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடித்து புலனாய்வுச் செய்வதற்கும் இலஞ்சம், ஊழல் பற்றிய தவறுகளுக்காகவும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளுக்காகவும் மற்றும் வேறு இணைந்த தவறுகளுக்காகவும் குற்ற வழக்குகள் தொடுக்கப்படுவதனை பணிப்பதறகும் அவற்றைத் தொடுப்பதற்கும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும், ஊழல் பழங்கங்களைத் தடுப்பதனை ஊக்குவிப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும், ஊழலை முறியடிப்பதற்கு பொதுமக்களுக்கு அறிவு புகட்டுவதற்கும் அவர்களிடையே விழிப்புணர்ச்சியை எழுப்புவதற்கும் இலஞ்ச சட்டம், 1994 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சட்டம் மற்றும் 1975ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தற் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்குமானதொரு சட்டமூலம் என்றார்.