🔴அக்குறணை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல்.


அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.


பாணந்துறையில் இஸ்லாமியர்களின் தொழுகையை இலக்கு வைத்து பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


எனவே, அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வகையில் விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


எவ்வாறாயினும், அக்குரணை பிரதேசத்தில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் சாத்தியம் இருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தல்துவ தெரிவித்தார்.


இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அக்குறணையில் உள்ள மேற்படி பகுதிக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அலவத்துகொட பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், சாத்தியமான தாக்குதலுக்கான குறிப்பிட்ட தேதி கடந்துவிட்டது,

இது ஒரு தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எஸ்.எஸ்.பி தல்துவ கூறினார்.


பொய்யான தகவல்களை பரப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


ரமழான் பண்டிகையை முன்னிட்டு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரினால் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்துள்ளார்.