பெளத்த அறநெறி பாடசாலைக்குள் நுழைந்து மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்



ஞாயிறு பௌத்த அறநெறி பாடசாலையில் 15 வயது மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கல் ஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த மாணவி தமது காதலை மறுத்ததன் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர் ஞாயிறு அறநெறி பாடசாலை வகுப்பிற்குள் நுழைந்து குறித்த தரம் 11 இல் கற்கும் மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த மாணவி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவருக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக கந்தளாய் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.


கலோயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடத்தப்படும் அறநெறி பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பி.எம். இமாஷா எனும் மாணவியே, நேற்று (02) மு.ப. 7.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக இவ்விபத்தைச் சந்தித்துள்ளார்.


மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட முயன்ற நபரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தியுள்ளார்.


​​சந்தேகநபர் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை குறித்த அறநெறி பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு வந்து அதனை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளதோடு, அவரது கோரிக்கையை மாணவி மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.