ரணிலின் ஆளுமையின் முன் எதிர்க்கட்சிகள் அடங்கிப்போனதா..?

 


இலங்கை நாடு பாரிய பொருளாதார சிக்கலில் அகப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே! இந் நிலையை சாதகமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முனைகின்றன. இது சாதாரணமாக நடக்கும் ஒன்றே! ஆட்சியை கைப்பற்ற, இச் சந்தர்ப்பத்தை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது எனலாம். ரணில் ஜனாதிபதியானதும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி " இலவு காத்த கிளியின் " நிலையாகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகின்றது.


திகதி குறித்த படி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றிருந்தால், ஐ.ம.ச மற்றும் தே.ம.சக்தி ஆகியன பெரு வெற்றி வாகை சூடியிருக்கும். ரணில் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருப்பார். மொட்டு இருந்த இடமும் இல்லாமல் உருக்குலைந்திருக்கும். இருப்பினும், தற்போதைய கள நிலவரம் முற்றிலும் மாற்றமாகவே உள்ளதையே அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களின் பார்வை ஜனாதிபதி ரணிலை நோக்கி திரும்பியுள்ளது. இவற்றை வார்த்தைகளால் சொல்வதை விட, சில ஆதாரங்களை முன் வைத்து பேசுவாது பொருத்தமானது எனலாம்.


அண்மையில் இரண்டு போராட்டங்களுக்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. கடந்த மார்ச் முதலாம் திகதி கறுப்பு ஆடை அணியும் போராட்டம் ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. இப் போராட்டத்தை திட்டமிட்டவர்கள் நினைத்தவாறு, அவர்களுக்கு இலங்கை மக்கள் ஆதரவு வழங்கவில்லை. அப் போராட்டம் படு தோல்வியை தழுவியிருந்தது எனலாம். அதன் பிறகு, கடந்த மார்ச் 15ம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் சில சேவைகள் தடைப்பட்டிருந்தாலும், பேசு பொருளாகுமளவு எதுவும் நடைபெறவில்லை. வழமை போன்று பஸ்கள் ஓடின. பெரும்பாலான வங்கிகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில புகையிரத சேவைகள் மாத்திரமே தடைப்பட்டிருந்தது.  பல தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்கியிருக்கவில்லை. இப்படி அப் போராட்டமும் தோல்வியை தழுவியிருந்தது. எதிர்க்கட்சிகள் மக்களை ஒன்றிணைந்து கோத்தாவின் ஆட்சியில் ஆடிய ஆட்டமெல்லாம் ரணிலின் ஆட்சியில் செல்லவில்லை என்பதை இவைகள் எமக்கு தெளிவு செய்கின்றன.


தேர்தல் தாமதமான ஆரம்ப காலத்தில், தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள் மா பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. அவைகள் மூலம் அரசுக்கு பாரிய அழுத்தம் வழங்கப்பட்டிருந்தன. அதனை எதிர்கொள்வது அரசுக்கு பாரிய சவாலாக அமைந்திருந்தது எனலாம். அப்போது வேண்டுமென்றால், தேர்தல் தாமதமாகுமா என்ற சந்தேகமே இருந்தது. தற்போதைய நிலையை நோக்கும் போது தேர்தல் என்ற ஒன்று கற்பனையிலும் நினைக்க இயலாதாறு தூரமாகியுள்ளது. ஏன் இப்போது எதிர்க்கட்சிகள் பெயருக்கேனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவில்லை? ஆர்ப்பாட்டங்கள் மக்கள் ஒத்துழைத்தாலே வெற்றி பெறும். இப்போது மக்கள் ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே அதற்கான பிரதான காரணமாகும். களம் பந்து வீச சாதகமில்லை என தெரிந்துகொண்டு, பந்துவிச செல்வார்களா?


ரணில் ஜனாதிபதியானதும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையே இருந்தது. அதனை தொடர அனுமதித்திருந்தால், இன்று ரணில் ஜனாதிபதியாக தொடர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே! அவர்களை அடித்து, துரத்தி அன்று ஜனாதிபதி ரணில், அதனை எதிர்கொண்டிருந்தார். தற்போது தொழிற்சங்களின் போராட்டங்கள் எல்லாம் பல வழிகளிலும் கருவறுக்கப்பட்டுள்ளன. அண்மையில் பெற்றோழிய கூட்டுதாபண சங்கங்களின் போராட்டம் மிகக் கடுந் தொணியில் அடக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே! இவற்றை நிமிர்ந்து நின்று எதிர்க்க மக்களாதரவும் தொழிற் சங்கங்களுக்கில்லை.


தற்போது மக்களாதரவு ஜனாதிபதி ரணிலை சூழ்ந்திருப்பதால் எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி ரணிலுக்கெதிராக எதனையும் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளியை வைத்துள்ள ரணிலின் ஆற்றலை மக்கள் ஏற்றுள்ளதே அதற்கான பிரதான காரணமாகும். இது தவிர்ந்து எழும் சிறிய சல சலப்புக்களையும் தொடக்கத்திலேயே ஜனாதிபதி ரணில் துடைத்தெறிகிறார். ஜனாதிபதி ரணிலின் ஆளுமையின் முன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.


ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.