நேற்று மு.கா தலைவர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இது பாரிய பேசு பொருளாகவும், விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது. ஒரு கட்சிகாரர் ஏனைய கட்சிகாரர்களை விமர்சிப்பது வழமையான ஒன்றே! அதுவே இங்கும் நடந்தேறியுள்ளது.
இப்தார் என்பது ஒரு பொது நிகழ்வு. அதுவும் பிரத்தியோகமாக முஸ்லிம்களுக்கான நிகழ்வு. இக் குறித்த நிகழ்வின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களை கௌரவிக்க முனைந்துள்ளார். கடந்த முறை இவர்கள் இவ்வாறான இப்தார் ஒன்றை செய்யவில்லை என்பது பாரிய விமர்சனமாக இருந்தது. இம் முறை இவர்கள் இப்தாரை செய்துள்ளார். இவ் விடயமானது அவர்களின் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை தெளிவு செய்கிறது. இந்த மாற்றத்தை சாதகமாக பயன்படுத்த முனைவதே சாதூரியம். நாளை அவர்கள் ஆட்சிக்கு வரலாம். எமது சமூகத்திற்கு அவர்களிடம் தேவையும் எழலாம்.
முஸ்லிம்கள் ஒருபோதும் ராஜபக்ஸவினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கருதியதாலேயே கடந்த முறை ராஜாபக்ஸவினர் முற்று முழுதாக முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை செய்ய முனைந்தார்கள் ( முஸ்லிம்கள் ராஜபக்ஸவினரை வெறுக்க அவர்கள் பக்கமும் பல பிழைகள் உண்டு ). அது ஜனாஸா எரிப்பில் வந்து நிறைவுற்றிருந்தமை நாமறிந்ததே. மீண்டும் அவ்வாறான ஒன்று நடைபெற கூடாது.
கடந்த முறை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது அதனை நிறுத்துமாறு ராஜபக்ஸ அரசிடம் பேச கூட யாருமிருக்கவில்லை. முற்று முழுதாக முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலை இன்னும் தொடரக் கூடாது. அதற்கு இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது பொருத்தமான அனுகுமுறை எனலாம்.
தற்போது ராஜபக்ஸ அணியினர் நொந்து நூலாகியுள்ளனர். இது அவர்கள், தாங்கள் செய்த தவறுகளை சுய பரிசீலனை செய்யும் நேரம். தாங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் தவறிழைத்துவிட்டோமா என சிந்திக்க வைக்கவும், இவ்வாறான விடயங்கள் வழிகோலும். நாளை ராஜபக்ஸவினர் ஆட்சியை கைப்பற்றாமல் விடலாம். நிச்சயம் அவர்கள் ஒரு குறித்த காலத்துக்கு இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்துவார்கள்.
அனைத்தையும் விமர்சிப்பது பொருத்தமானதல்ல. மு.கா தலைவர் ஹக்கீம் குறித்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமையானது, முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றே!
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.