தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் : சுகாதார அமைச்சு



தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.


விசேடமாக, தொழில் புரியும் இடங்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலும் இந்த செய்தியை கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


உடல் சுறுசுறுப்பாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் தெளிவூட்டுவதே இந்த 'உடல் ரீதியான சுறுசுறுப்பு' மாதத்தின் நோக்கமாகும்.


இதன் ஊடாக, திடீர் மரணத்தை தவிர்த்தல், நீரிழிவு நோய், இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுபடுத்தவும், எலும்பு, தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமைக்கும், புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பதற்கும் உடல் சுறுசுறுப்பு மிக முக்கியமானது என்றும்; அவர் கூறியுள்ளார்.