🔴ராஜிதவுக்கு வழங்கினால் ரோஹிதவுக்கும் வழங்குமாறு கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


“ரோஹிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் ராஜிதவுக்கு மட்டும் பதவி வழங்க வேண்டாம்” என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை செய்தவர். அவருக்கு வழங்காமல் ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த சில வாரங்களாக ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின.


இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.