பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் விரைவில் இணைந்து கொள்வர் - கல்வி அமைச்சு(எம்.ஆர்.எம்.வசீம்)


அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சும், நிதி அமைச்சும் இணக்கப்பாட்டுடன் மாற்றுத்தீர்வு வழங்கி இருப்பதால் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கமும் உயர்தர மாணவரின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இணைந்துகொள்வதற்காக விரைவாக பதில் வழங்கும் என்பது இலட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக வியாழக்கிழமை (6) ஆசிரியர் சங்கம் ஒன்றினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து, ஊடகங்களில் பிரசாரமான விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பப்படிவம் கோரும்போது, அதற்காக மொத்த தேவையாக இருந்த 19ஆயிரம் மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையில் 12ஆயிரம் பேரே விண்ணப்பித்திருந்தனர்.


இந்த நிலைமையை உணர்ந்துகொண்ட கல்வி அமைச்சர், ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வழங்கப்படுகின்ற கட்டணத்துக்கு மேலதிகமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டடுவந்த 500 ரூபா கொடுப்பனவை 2ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கும் 81 கிலாே மீட்டருக்கு அதிக தூரத்தில் இருந்து விடைத்தாள் மதிப்பிடுவதற்கு வரும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2900ரூபா வரை அதிகரிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். அதற்காக திறைசேரியிடமிருந்து மேலதிக ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.


அத்துடன் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கடந்த மாதம் 3ஆம் திகதி முதலாவது கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் திறைசேரி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.


அதன் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு, நிதி அமைச்சும் இணக்கப்பட்டுடன் மாற்று தீர்வு வழங்கி இருப்பதுடன் அதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துக்கும் அறிவிறுத்தி இருக்கிறது.


அத்துடன் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக ஊடக அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டது.


கல்வி அமைச்சு இந்த முக்கியமான பிரச்சினை தொடர்பாக கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பத்தில் இருந்தே ஆசிரிய தொழிற்சங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரிய சங்கங்களும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்க்கமான நடவடிக்கைக்கு வந்துள்ளதுடன் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இது தொடர்பாக தற்போது ஆசிரிய தொழிற்சங்கம் முன்னேற்றகரமான பதிலாேன்றை வழங்கி இருப்பதுடன் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கமும் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இணைந்துகொள்வதற்காக விரைவாக பதில் வழங்கும் என்பது இலட்சக்கணக்கான மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.