சஜித் தலைமையில் மீண்டுமொரு கூட்டணி ! ஒரே நிலைப்பாட்டில் தீர்மானங்களை எடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்
(எம்.மனோசித்ரா)


உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகிய 3 விடயங்கள் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் தீர்மானங்களை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக தீர்மானித்துள்ளன.


ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மலையக மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் திங்கட்கிழமை (24) பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் ஜனநாயகத்துக்கு முரணான சட்டமூலங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கூட்டாக எதிர்ப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.


இதற்காக மேற்குறிப்பிட்ட சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.


அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பாரிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு தமது இணக்கம் தெரிவித்தன.


பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி செயற்படும் தரப்பினர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டணியில் அங்கத்தும் வகிக்கும்.


உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், மத்திய வங்கி சட்டமூலம், நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் சகல தரப்பும் ஒரே நிலைப்பாட்டை எட்டியுள்ளன.


அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி காணப்படும். அதற்குரிய ஆரம்பட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.