🔴ஹஜ் நிதியத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடிக்கும் அதிக பணம்.

 றிப்தி அலி 


ஹஜ் நிதியத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 858 ரூபாவும் 83 சதமும் காணப்படுகின்ற விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.


இந்நிதி இலங்கை வங்கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் முழாரபா கணக்கு ஆகியவற்றில் காணப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.


“ஹஜ் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும், ஹாஜிகளின் நலன்களுக்காகவும், சமூகத்தின் தேவையாகவுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஹஜ் நிதியத்தின் ஒரு தொகுதியினை பயன்படுத்த முடியும்” என திணைக்களத்தின் தகவல் அதிகாரி உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரிவித்தார்.


இந்த வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கடந்த மார்ச் 14ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த மார்ச் 28ஆம் திகதி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நான்காவது பகுதியில் கட்டண வருமானத்தினை முகாமை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒவ்வொரு யாத்திரிகர்களுக்குமான பதிவுக் கட்டணமாக 4 ஆயிரம் ரூபாவினை ஹஜ் முகவர்கள் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும்.


அதேபோன்று ஒவ்வொரு யாத்திரிகர்களும் மீளச் செலுத்தக் கூடிய 25 ஆயிரம் ரூபாவினை திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும். ஹஜ் குழுவினால் சேகரிக்கப்படும் பதிவுக்கட்டணம், நன்கொடை, ஏனைய வருமானங்கள் அனைத்தும் அரச வங்கியொன்றில் ஹஜ் கணக்காக பேணப்படும். இந்த நிதிக்கு ஹஜ் குழுவே பொறுப்பாகும்.


இந்த வருடம் இலங்கைக்கு 3,500 ஹஜ் கோட்டாக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கான உத்தரவாத பணமாக (warranty money) ஒரு கோட்டாவிற்கு 68 சவூதி றியால்கள் வீதம் 238,000 சவூதி றியால்கள் செலுத்த வேண்டும். இதன் இன்றைய இலங்கை ரூபா பெறுமதி சுமார் 2 கோடி 2 இலட்சத்து 30 ஆயிரமாகும்.


ஹஜ் நிதியத்தின் ஊடாக செலுத்தப்படவுள்ள இத்தொகை, ஹஜ் முகவர்களிடமிருந்து பின்னர் அறவிடப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, 150 பேஸாக்களும் (Bessa) இம்முறை இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 45 ஹாஜிகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பேஸாக்கள் ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.


இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள பேஸாக்கள் மருத்துவக் குழு மற்றும் நிர்வாக தன்னார்வலர்களை அனுமதிக்கப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் தெரிவுசெய்து வழங்கப்படவுள்ளன.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி வழி அடிப்படையில் ஹஜ் குழுவின் உறுப்பினராக செயற்படுவார். இதனால், ஹஜ் குழு எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதும், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரமும் திணைக்களத்தின் பணிப்பாளருக்கே உள்ளது.


அது மாத்திரமல்லாமல், ஹஜ் குழுவின் அங்கீகாரத்துடன் ஹஜ் நிதியத்திலிருந்து மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு அனுமதி வழங்கும் அங்கீகாரமும் திணைக்களத்தின் பணிப்பாளரிடமே காணப்படுகின்றது.


இதேவேளை, சவூதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை யார்த்திரிகர்களுக்கான கோட்டாவினைப் பெறல், ஹாஜிகளுக்கான போக்குவரத்து மற்றும் மினா தங்குமிட வசதிகள் போன்ற ஏற்பாடுகளைச் செய்வதற்காக சவூதி அரேபிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தல், சுயேட்சையாக செயற்படும் ஒரு குழுவை நியமித்து ஹஜ் முகவர்களுக்கு நேர்முகப் பரீட்சையினை மேற்கொண்டு அக்குழுவினால் பரிந்துரை செய்யப்படும் ஹஜ் முகவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்தல், விமான சேவை முகவர்களுடன் கலந்துரையாடி ஹாஜிகள் செலுத்த வேண்டிய விமான பயணச் சீட்டுக்கான கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுத்தல் போன்றன ஹஜ் குழுவின் பிரதான செயற்பாடுகளாகும்.


இதற்கு மேலதிகமாக ஹஜ் முகவர்கள் யாத்திரிகர்களுக்கு வாக்குறுதி வழங்கியது போன்று செயற்படுகின்றனரா என்பதை திணைக்களத்துடன் இணைந்து மேற்பார்வை செய்தல், ஹஜ் முடிவுற்றதும் முகவர்கள் தொடர்பில் கருத்துக் கணிப்பொன்று மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தல், ஹஜ் முடிவுற்றதும் முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்று சுயேட்சையான குழுவொன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ளல், விசாரணைக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எடுத்தல் போன்ற பணிகளும் ஹஜ் குழுவிடம் காணப்படுகின்றது.


- Vidivelli