மூத்த முஸ்லிம் தலைமைகளை நம்பி அர்த்தமில்லை. 6 முஸ்லிம் எம்.பி. கள் ஒன்றிணைந்து புதிய குழுவாக செயல்படுகின்றோம் - இஷாக் ரஹுமான்


ஐ.எம். மிதுன் கான்

 

நாட்டில் முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்து வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்காக நாங்கள் 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வருவதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார். கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் அரபுக்கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.


கஹட்டகஸ்திகிலிய ஹம்தானியா அரபுக்கல்லூரியின் இரண்டாவது அல் ஆலிம் பட்டமளிப்பு விழா 14 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.எம். சமீர் (ரஷீதி) அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் மார்க்க அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இப்பட்டமளிப்பு விழாவில் 13 மாணவர்கள் அல் ஆலிம் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய இஷாக் ரஹுமான் கருத்து தெரிவிக்கையில்,


இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் காலம் காலமாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பல இருந்துவருகின்றன. அவற்றுள் முக்கியமானதொரு பிரச்சினை தான் முஸ்லிம் பள்ளிவாயல்கள், மத்ரசாக்களை பதிவு செய்துகொள்வது தொடர்பான பிரச்சினை. இதுவரை 317 பதிவு செய்யப்பட்ட மத்ரசாக்களும், 137 பதிவு செய்யப்படாத மத்ரசாக்களும் இயங்கி வருகின்றன. அவற்றுள் 70 மத்ரசாக்களின் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டிருந்தாலும் கூட முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இன்னும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்படவில்லை. இது தொடர்பில் எந்த ஒரு மூத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கண்டுகொள்வதுமில்லை.


பிச்சைக்காரனுக்கு புண் இருந்தால் தான் பிச்சை எடுக்கலாம் என்பதுபோல முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகள் இருந்தால் தான் அரசியல் செய்யலாம் என்றவொரு வங்குரோத்து அரசியல் நோக்கத்திற்காக காலம் காலமாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் மூத்த அரசியல் தலைமைகளினால்  கண்டுகொள்ளப்படாமல் இருப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றை கருத்திற்கொண்டு தான் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டும் நோக்கில் இஷாக் ரஹுமான் ஆகிய நானும், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், முஷாரப், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவ்பிக், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகிய ஆறுபேரும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக இயங்கி முஸ்லிம் சமூக பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்த்து வைப்பதாக முடிவு செய்துள்ளோம்.


இதன் ஆரம்ப கட்டமாக, பதிவு செய்யப்படாத மத்ரசாக்களை பதிவு செய்வது தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றில் உரையாற்றியதோடு அந்த உரைக்கு பதில் தரும் முகமாக நீதி அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியோடு கலந்துரையாடுவதற்கு எமக்கு நேரம் ஒதுக்கி தருவதாகவும் அக்கலந்துரையாடலில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி அவற்றுக்கான உடனடி  தீர்வினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார். எமது இக்குழுவானது இப்பிரச்சினையோடு நின்றுவிடாமல் எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத்தேடி தொடர்ந்தும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.