🔴உம்ரா விசா இடைநிறுத்தம் : இலங்கை யாத்திரிகர்கள் 810 பேர் அசௌகரியம்

 


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு திடீரென நேற்று உம்ரா விசா விநியோகத்தை இடை நிறுத்தியதால் இலங்கையிலிருந்து உம்ராவுக்கு செல்லவிருந்த சுமார் 810 யாத்திரிகர்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகினார்கள்.


விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஹஜ் உம்ரா அமைச்சின் இணையதளம் விசா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததனாலே இந்நிலைமை ஏற்பட்டது. உம்ரா விசா விநியோகம் எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிவரை இடம்பெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் உம்ரா விசா விநியோகம் மீண்டும் இன்று மதியம் (நேற்று) ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் பயணிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சப்ரி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.


இலங்கை மாத்திரமல்ல உலகளாவிய ரீதியில் 19 நாடுகள் உம்ரா விசா தொடர்பில் அசெளகரியங்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.


எதிர்வரும் ஹஜ் யாத்திரையை முன்னிட்டு அதன் ஒழுங்குபடுத்தல் பணிகளுக்காக உம்ரா விசா விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சவூதி ஹஜ் உம்ரா அமைச்சுக்கு இலங்கை ஹஜ்முகவர் சங்கங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளன.-


- Vidivelli