இலங்கையின் நிலையே பாகிஸ்தானும் முகங்கொடுக்கும் - எச்சரிக்க்கும் முன்னாள் பிரதமர்




(நா.தனுஜா)


தேர்தல்களை உடனடியாக நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியை ஒத்த சூழ்நிலைக்கு பாகிஸ்தான் முகங்கொடுக்குமென அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.


'இது எச்சரிக்கை அல்ல. இது என்னுடைய மதிப்பீடாகும். வெகுவிரைவில் தேர்தல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கையில் கட்சிக் கூட்டங்களிலும் பேரணிகளிலும் பொதுமக்கள் அமைதியாகச் செயற்படுகின்றார்கள். இருப்பினும் வாக்களிப்பதற்கான அவர்களின் உரிமை மறுக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள். அப்போது ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல்போகும்' என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் கட்சி உறுப்பினர்களுடன் நிகழ்நிலை முறைமையில் நடத்திய கலந்துரையாடலொன்றின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


'பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைவரத்தை மனதிலிருத்தி, அதில் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலேயே நான் இதுவரையில் கட்சித் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். ஆனால் தற்போத தேர்தல்களை நடாத்துவதில் தாமதம் ஏற்படுமாயின், நெருக்கடி நிலைவரம் கைமீறிச் சென்றுவிடும்' என்று எச்சரித்துள்ள இம்ரான் கான், அதனை இலங்கையின் கடந்த கால நெருக்கடிகளுடன் ஒப்பிட்டுக் காண்பித்துள்ளார்.