🔴ராஜபக்‌ஷக்களின் ஓடும் நாய்களுக்கு எச்சரிக்கை


நாங்கள் இதுவரையில் வன்முறையில் ஈடுபட்டதில்லை ஆனால்ராஜபக்‌ஷக்களின் ஓடும் நாய்கள் இன்னொரு போராட்ட (அரகலய) செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், நாம் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம், என அண்மையில் அரசியல் குண்டர்களால் போராட்ட செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராகப் பேசிய அரகலய செயற்பாட்டாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மே 9 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, தங்கள் எஜமானர்களுடன் பொது வெளியில் வராத சில அரசியல் அடியாட்கள், மீண்டும் தங்கள் மறைவிலிருந்து வெளியே வந்து மக்களைத் துன்புறுத்துவது போல் தெரிவதாக நேற்று நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போராட்ட செயற்பாட்டளர்கள் சிலர் தெரிவித்தனர்.


போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.


நாங்கள் இதற்கு முன் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை. காலி முகத்திடலில் அமைதியான போராட்டத்திலேயே ஈடுபட்டோம் என அரகலய செயற்பாட்டாளர் மனோஜ் முதலிகே தெரிவித்தார்.


நாங்களும் நாட்டு உணவு உண்டு வளர்ந்த இளைஞர்கள் தான். இன்னொரு முறை போராட்ட செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், நாம் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம். முழு நாட்டையும் ஒன்று திரட்டுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


போராட்ட செயற்பாட்டாளர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு, குறித்த ஊடக சந்திப்பில்  செயற்பாட்டாளர் மொஹமட் ருஷ்டி தனது கண்டனத்தையும்  வெளிப்படுத்தினார்.